Sunday, February 2, 2014

டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்க சமூக உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேச்சு


திருச்சி,daily thanthi
பெண் குழந்தைகளை பாதுகாக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சமூக உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசினார்.
கருத்தரங்கு
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பது பற்றிய பயிற்சி கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. சுகாதார துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கை திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் தலைமையில் அனைவரும் பாலின பாகுபாடுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கலெக்டர் பேச்சு
கருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:–
பெண் குழந்தைகளை பாதுகாக்க மருத்துவர்களும், ஸ்கேன் சென்டரில் பணியாற்றுபவர்களும் சமூக உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மனிதர்களாக பிறந்ததில் அர்த்தம் இல்லை. மருத்துவ கணக்கெடுப்பின் படி, கடந்த 20 வருடங்களில் ஒரு கோடி பெண் குழந்தைகள் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிசெப் புள்ளி விவரப்படி, சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தின் விளைவின் காரணமாக இந்தியாவில் 8000 குழந்தைகளில் 7997 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு நடைபெற்றுள்ளது.
பெண் குழந்தைகள் குறைவு
திருச்சி மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின்படி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 947 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். பெண் சிசு கொலைக்கு கூறப்படும் சமூகக் காரணங்களில் வறுமை முக்கியமானதாகக் கூறப்படுகிறது. டெல்லி, பஞ்சாப் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கூட இக்கொடுமை அதிகமாக நடைபெறுகிறது. எனவே, இதற்கு வறுமை முக்கிய காரணமல்ல என்பதும், சமூகத்தில் ஆண் குழந்தை இருந்தால் தான் கவுரவம் என்ற பிற்போக்கு மனப்பான்மை தான் காரணம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அபாயம்
பெண் குழந்தைகள் எந்த வகையிலும் ஆண் குழந்தைகளுக்கு சோடை போகாது. பெற்றோர்களை கடைசி வரை காப்பாற்றுவது பெண் குழந்தைகள் தான். பெண் சிசு கொலையால் பிற்காலத்தில் வரக்கூடிய சமூக விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும். திருமணம் செய்ய பெண் கிடைக்காத நிலையும், பெண்ணை விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இதுதவிர, ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடிய வன்கொடுமையும் உண்டாகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண் சிசு கொலையை தடுப்பதை சட்டத்தால் மட்டுமே மாற்றிவிட முடியாது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற சொல்லுக்கேற்ப மக்களுக்கு நாம் சொல்லி, சொல்லித்தான் மனமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கருத்தரங்கில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) மனோகரன், கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்ஆர்.வள்ளி நாயகம், துணை முதல்வர் டாக்டர் அலீம், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர். ஜெயினுலாப்தீன் (முசிறி), ஜனனி சவுந்தர்யா (ஸ்ரீரங்கம்), அரசு வழக்கறிஞர் எம். அசோகன், டாக்டர் பரிமளா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment