Sunday, February 2, 2014

மணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


மணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்சி,
மணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண் குழந்தை பிறந்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மாமுண்டி. விவசாயியான இவரது மனைவி விஜயா(வயது 29). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் விஜயா மீண்டும் கருவுற்றார். கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 2 கைகளும், 2 கால்களும், வயிற்று பகுதியில் வளர்ச்சியடையாத நிலையில் உடலின் பின்பகுதியும் அதில் 2 கைகளும், 2 கால்களும் இருந்தது. இதனை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 குழந்தைகள் ஒட்டி பிறந்ததில் ஒரு குழந்தைக்கு ஜீன்கள் சரியாக வளராதது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற...
இதையடுத்து அந்த ஆண் குழந்தையை நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் இன்குபேட்டரில் அந்த ஆண் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் வயிற்று பகுதியில் தலை மற்றும் உடல் இல்லாமல் ஒட்டியுள்ள 2 கை, 2 கால்கள் மற்றும் உடலின் பின்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான நடவடிக்கையை திருச்சி அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் தலைமையில் துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
முதல்–அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம்
வருகிற திங்கட்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறுவை சிகிச்சை முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள இருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தற்போது அந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு தேவையான ஒவ்வொரு பரிசோதனைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று வித்தியாசமான அறுவை சிகிச்சை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment