Saturday, December 22, 2012

திறன்மிக்க இளைஞர் எண்ணிக்கை 2022ல் 50 கோடி ஜார்க்கண்ட் மாநில கவர்னர் நம்பிக்கை

திருச்சி: ""வரும் 2022ம் ஆண்டில் 50 கோடி திறன் மேம்பாடு கொண்ட இளைஞர்கள் இந்தியாவில் இருப்பர்,'' என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னர் பரூக் மரைக்காயர் பேசினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வைரவிழா நேற்று நடந்தது. விழாவை துவக்கி வைத்து, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் பரூக் மரைக்காயர் பேசியதாவது: இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானின் முதல் வாசகமே "ஓதுங்கள்' (இக்ரார்) என்றுள்ளது. அதற்கு கற்றுக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். கல்வி என்பது தொடர்ச்சியான செயல். அறிவே இந்திய நாட்டின் சொத்து என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். போட்டியான இந்த உலகில் திறன் மேம்பாடு கொண்ட இளைஞர்களே தேவை என்பதே நமது நோக்கம். இந்தியாவில் தற்போதைய இளைஞர்களின் எண்ணிக்கை 54 கோடி. வரும் 2022ம் ஆண்டில் 50 கோடி திறன் மேம்பாடு கொண்ட இளைஞர்களை உருவாக்குவதே நோக்கமாக கொண்டுள்ளோம்.


கல்வி என்பது வெறும் வாழ்க்கை பிழைப்பிற்காக என 80 சதவீத பேரும், கல்வி என்பது வாழ்க்கை என 20 சதவீத பேரும் தெரிவித்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு, "ஆசிரியர்கள் என்பவர்கள் மரத்தின் ஆணி வேர்களாகவும், கற்பித்தல் என்பது கிளைகளாகவும் இருக்க வேண்டும்' என்ற விவேகானந்தரின் பொன்மொழிதான் எனது நிலைப்பாடு.ஜமால் முகமது கல்லூரி வெறும் கல்வி போதிக்கும் நிலையமாக இல்லாமல், தரமான கல்வியை கொடுத்து, சமுதாய பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


சிறந்த கல்விச் சேவைக்காக, கல்லூரி தாளாளர் அப்துல் கபூர், தலைவர் நூருதீன், பொருளாளர் கலீல் அகமது, துணைச் செயலாளர் காஜா நஜிமுதீன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், முகமது அப்துல் கனி, ஜபருதீன் உள்ளிட்ட 64 பேருக்கு, கவனர் பரூக் மரைக்காயர் விருது வழங்கி கவுரவித்தார். விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியபோது, ""கடந்த 1990ம் ஆண்டே இணையதள இணைப்புடன் கல்வி போதித்த பெருமை ஜமால் முகமது கல்லூரிக்கு உண்டு. உலகத்திலேயே முன்னாள் மாணவர்கள் சங்கம் இக்கல்லூரியில் மிக வலுவாக உள்ளது,'' என்றார். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஷேக் முகமது வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஹிதயத்துல்லா, முன்னாள் எம்.பி., எல்.கணேசன், பாரதிதாசன் பல்கலை ஐ.இ.சி.டி., இயக்குனர் பார்த்தசாரதி, டாக்டர்கள் அலீம், ஜமீர் பாஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment