Friday, May 27, 2011

திருச்சியில் தடுக்கி விழுந்த மூன்று வயது சிறுவன் வலிப்பு ஏற்பட்டு பரிதாப பலி

திருச்சியில் தடுக்கி விழுந்த மூன்று வயது சிறுவன் வலிப்பு ஏற்பட்டு பரிதாப பலி


திருச்சி: திருச்சியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், கீழே விழுந்து அடிபட்டதால், வலிப்பு ஏற்பட்டு இறந்தான். திருச்சி-புதுக்கோட்டை சாலை ஜெயில்கார்னர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (41) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (3). நேற்று காலை கோகுலகிருஷ்ணன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். விளையாடும்போது கால் தவறி கீழே விழுந்ததால், நெற்றி, நெஞ்சுப் பகுதியில் அடிபட்டது. தலையில் ரத்தக்காயம் எதுவும் ஏற்படவில்லை. மயங்கிய நிலையில் இருந்த அவன் அருகில் உள்ள கிளினிக் கொண்டு செல்லப்பட்டான்.
சிகிச்சைக்கு பிறகு ஓடி விளையாடிய அவனை ஆறுமுகம் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின், ஆறுமுகம் மருந்து வாங்கி வர வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். மீண்டும் ஆறுமுகம் வீடு திரும்பியபோது, கோகுலகிருஷ்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே, வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டர் குருநாதனிடம் கொண்டு சென்றனர். அவர், "உடல்நிலை மோசமாக இருப்பதால், உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்றார். திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தான். கே.கே.,நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், மீண்டும் வீட்டுக்கு பிணமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
*"அசால்ட்டா' இருக்காதீங்க:சிறுவன் கோகுல கிருஷ்ணன் இறப்பு குறித்து, திருச்சி அரசு மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் கூறியதாவது: கோகுலகிருஷ்ணனுக்கு தலையில்பட்ட அடியின் வேகத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பினாலோ அல்லது நெஞ்சில் அடிபட்டதால் ரத்தத்தில் ஏற்பட்ட உப்புத்தன்மை, அமிலத்தன்மை மாற்றத்தால் வலிப்பு நோய் வந்திருக்கலாம். ரத்தகாயம் ஏற்பட்டால் தான் பெரிய காயம் என்பதில்லை. சாதாரணமாக அடிபடும் போதும் கூட உடலுக்குள் பெரியளவில் உள்காயம் ஏற்படலாம். சிறுவர்கள் அடிபடும் போது, "சொன்னால் பெற்றோர் அடிப்பர்' என்று சொல்லாமல் இருப்பர். எனவே, எப்போது குழந்தைகளுக்கு அடிபட்டாலும், அடிபட்டதாக தெரிந்தாலும், உடனடியாக டாக்டர்களை ஆலோசித்து, அவர்களின் ஆலோசனைப்படி உரிய சோதனைகளை செய்யவேண்டும். அப்போதுதான் உங்களது செல்ல குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011,00:20 IST

No comments:

Post a Comment