Wednesday, October 27, 2010

சட்டசபை மனுக்கள் குழு "விசிட்'

சட்டசபை மனுக்கள் குழு  "விசிட்'
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2010,01:38 IST

தினமலர்


திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த சட்டசபை மனுக்கள் குழு, சம்பிரதாயத்துக்காக "விசிட்' செய்தது. மனுக்கள் குழுவில் இடம் பெற்ற பெரும்பாலான உறுப்பினர்கள் வரவில்லை. மனுக்கள் குழுதலைவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றதால், இரண்டு மணி நேரம் டாக்டர்கள் காத்திருந்து வரவேற்றனர்.தமிழக சட்டசபையில் பல்வேறு நிலை, மானியம், பொருளாதாரம், மனு என பல்வேறு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுக்களும் ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். வால்பாறை தொகுதி காங்., எம்.எல்.ஏ., கோவைதங்கம் தமிழக சட்டசபை மனுக்கள் குழு தலைவராக உள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், ராமன், உதயம்சண்முகம், கண்ணன், குணசேகரன், சுப்பிரமணியம், டில்லிபாபு, நெடுஞ்செழியன், புஷ்பராஜ், விஷ்ணுபிரசாத் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழு எந்த மாவட்டத்தில் ஆய்வு செய்கிறதோ, அங்கு சட்டசபை செயலர் செல்வராஜ், துணைசெயலர் காயத்ரி, சார்பு செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் சென்று அவற்றை பதிவு செய்வர்.மனுக்களை பரிந்துரைக்க மட்டுமே இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவோ, கால அவகாசமோ கூற இயலாது. "ஏன் இந்த பணி நடக்கவில்லை?' என்று அதிகாரிகளை கேள்வி எழுப்பலாம்.

தமிழக சட்டசபை மனுக்கள் குழு நேற்று காலை திருச்சியில் ஆய்வு மேற்கொண்டது. காலை 9.30 மணிக்கு திருச்சி மருத்துவமனைக்கு சட்டசபை மனுக்கள் குழு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் குழு தலைவர் கோவைதங்கமும், சட்டசபை துணைசெயலாளர் காயத்ரி இருவரும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றனர். இதனால், இக்குழு வர தாமதமானது. சட்டசபை மனுக்கள் குழு வருகையை முன்னிட்டு மருத்துவமனை சுத்தம் செய்யப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டு, பளீச்சென காணப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அலீம் மற்றும் டாக்டர்கள் குழு காலை 9.30 மணியிலிருந்து சட்டசபை மனுக்கள் குழுவை வரவேற்க காத்திருந்தனர்.பொறுத்து பார்த்த டாக்டர் அலீம், கால் வலி தாங்காமல் வெளியே இருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டார். பெரும்பாலான டாக்டர்கள் வெளியே காத்திருந்ததால், உள்ளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஒரு வழியாக மனுக்கள் குழு காலை 11.15 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தது. தலைவர் கோவைதங்கம், உறுப்பினர்கள் அன்பழகன், உதயம்சண்முகம், புஷ்பராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் மட்டும் வந்தனர். நேராக பிரசவ வார்டுக்கு சென்ற குழுவினர் ஒப்புக்கு பார்வையிட்டனர்.தலைவர் கோவைதங்கம், அங்கிருந்த குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தலா 500 ரூபாய் கொடுத்தார். வெளியே அமர்ந்திருந்த பொதுமக்களிடம், "சிகிச்சைக்காக யாரும் காசு வாங்கலைலே? தண்ணீர் சுத்தமாக வருது தானே? நல்ல சிகிச்சை தர்றாங்கள்ள? போதுமான டாக்டர்கள் இருக்காங்கள்ள?'' என்று பேசினார்.இறுதியாக ஒரு பெண் ""எல்லாம் நல்லா செய்றாங்க. நீங்க வந்துருக்கீங்க. ஏதே 1,000, 500 கொடுத்தா நல்லா இருக்கும்' என்றார். உடனே ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து "எல்லாரும் காஃபி சாப்பிடுங்க' என்றார். அதை பொதுமக்கள் வாங்க மறுத்துவிட்டனர். சம்பிரதாயத்துக்காக பார்வையிட்ட மனுக்கள் குழு 15 நிமிடங்களில் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பியது.

No comments:

Post a Comment